உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு பேடிஎம் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மின்னனு  பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் முக்கிய இடம் வகித்து வருகிறது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை தற்போது அனைத்து இடங்களிலும் பேடிஎம் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் வசதி இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் இது போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக சுலபமாக வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும் வசதி, ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், விமான டிக்கெட் போன்றவற்றிற்கு கட்டணம் செலுத்தும் வசதி அதேபோல் செல்போன், டிடிஎச் போன்றவற்றை ரீசார்ஜ் செய்யும் வசதி போன்ற பல்வேறு வசதிகளை பேடிஎம் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்குவதற்காக பேடிஎம் நிறுவனம் (UPI Lite features) என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பணம் செலுத்துவதில் ஏற்படும் சிக்கல் மற்றும் பேமெண்ட் பெயிலர் ஆகாமல் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் யுபிஐ பின் இல்லாமல் ரூ.200  வரை உடனடி பேமெண்ட் செய்து கொள்ளலாம் எனவும் பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் யுபிஐ லைட் பேலன்ஸில் ரூ.1000 கூடுதலாக சேர்த்தால் கேஷ் பேக் கிடைக்கும் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.