கிருஷ்ணகிரியில் சிப்காட் அமைப்பதற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி விவசாயிகளுடன் சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். அதன் பிறகு கே.பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. அதிமுகவை பொருத்தவரையில் இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி இந்தியாவின் புகழை உலக நாடுகளுக்கு எல்லாம் எடுத்துச் சென்றுள்ளார்.

எனவே தேசிய நலன் கருதி மீண்டும் மோடி தான் பிரதமராக வேண்டும் என அதிமுக விரும்புகிறது. நீங்கள் பாஜக தனியாக நிற்குமா அதிமுக தனியாக நிற்குமா என்று கேள்வி எழுப்பி எங்களுக்குள் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாதீர்கள். பல்வேறு சிந்தனை உடையவர்கள் ஒரே கட்சியில் இருப்பார்கள். அவர்கள் சில  கருத்துக்களை கூறும் போது அனுபவம் வாய்ந்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு ஒதுங்கி செல்ல வேண்டும். அப்போது போதுதான் நாம் நினைத்த இடத்தை அடைய முன்னேற முடியும். தமிழகத்தில் அண்ணாவும், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிச்சாமியும் வாரிசு அரசியலை உருவாக்கவில்லை.

ஆனால் கலைஞர் கருணாநிதி முதல்வரான பிறகு தன்னுடைய மகனை வாரிசாக நியமித்தார். ஆனால் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை ஸ்டாலினை மேயராக மட்டும் தான் வைத்திருந்தார். இறுதி காலத்தில் தான் அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எந்நேரமும் தன்னுடைய மகனை அமைச்சராக்குவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். தற்போது தமிழகத்தில் வாரிசு அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.