லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது..

ஐபிஎல் தொடரின்10வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. லக்னோவில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக அன்மோல்பிரீத் சிங் மற்றும் மயங் அகர்வால் இருவரும் களமிறங்கினர். அன்மோல்பிரீத் சிங் நல்ல துவக்கம் கொடுத்த நிலையில், மயங் அகர்வால் 8 ரன்கள் இருந்தபோது, க்ருனால் பாண்டியா வீசிய 3வது ஓவரில் ஸ்டாய்னிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து வந்த ராகுல் த்ரிப்பாதி  மற்றும் அன்மோல்பிரீத் சிங் இருவரும் ஜோடி சேர்ந்து சற்று தாக்குப்பிடித்தனர். அதன்பின் சிறப்பாக ஆடிவந்த துவக்க வீரர் அன்மோல்பிரீத் சிங் 31 (26)ரன்களில் இருந்தபோது க்ருனால் பாண்டியா வீசிய 8வது ஓவரின் 5வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதையடுத்து அதே ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் எய்டன் மார்க்ரம் டக் அவுட் ஆனார்.. தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சுழல்பந்துவீச்சாளரிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்..

ஹாரி புரூக் 3 ரன்களில் அவுட் ஆனார். ஹைதராபாத் 9 ஓவரில் 55 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதையடுத்து ராகுல் த்ரிப்பாதி  – வாஷிங்டன் சுந்தர்  இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதால் பவுண்டரி அடிக்க திணறினர். அதன்பின் பொறுமையாக ஆடிவந்த ராகுல் திருப்பாதி 18வது ஓவரில் 34 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து  வாஷிங்டன் சுந்தர் 19 ஆவது ஓவரில்  16 ரன்களில்  அவுட் ஆனார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஆடில் ரசித் (4 ரன்கள் )  அவுட் ஆனார்.

இறுதியில் ஜெய்தேவ் உனத்கட் வீசிய கடைசி ஓவரில் அப்துல் ஜமாத் 2 சிக்ஸர்கள் விளாச 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்தது. அப்துல் சமாஜ் 21 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் ரன் எடுக்காமலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.  லக்னோ அணியில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளும், யஷ் தாகூர் மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தற்போது லக்னோ அணி களமிறங்கி ஆடி வருகிறது.