கொலை செய்ய துடிக்கும் தாதாவிடமிருந்து தப்பிக்க நினைக்கும் காதலர்களின் கதைக்களம் தான் “மைக்கேல்”.

தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு போகிறார் நாயகன் மைக்கேல். இதையடுத்து ஒரு வழியாக தந்தையை தேடி கண்டுபிடிக்கிறார். மற்றொரு புறம் மும்பையின் டானாக வலம் வருகிறார் கவுதம் மேனன். இந்நிலையில் ஒரு நபர் கவுதம் மேனனை கொலைசெய்ய முயற்சிக்கிறார். கொல்ல வந்த அந்நபரிடமிருந்து கவுதம் மேனனை, மைக்கேல் காப்பாற்றுகிறார்.

இதன் காரணமாக கவுதமுடன் நெருக்கமாகும் மைக்கேல், அவர் கட்டுப்பாட்டில் உள்ள ஏரியா ஒன்றையும் பார்த்துக் கொள்கிறார். அதன்பின் தன்னை கொலை செய்ய திட்டமிட்டது யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை தீர்த்துக்கட்ட கவுதம் முடிவெடுக்கிறார். அதனை தொடர்ந்து கொலை செய்ய திட்டமிட்ட நபரின் மகளை கண்டுபிடிக்கிறார்.

அந்நபரையும் அவரது மகளையும் கொலை செய்ய மைக்கேலை கவுதம் அனுப்பி வைக்கிறார். இதற்கிடையில் சென்ற இடத்தில் அந்த பெண்ணுடன் மைக்கேலுக்கு காதல் மலர, இருவரும் நெருக்கமாகிறார்கள். இதனால் அப்பெண்ணையும், அவரின் தந்தையையும் மைக்கேல் கொலை செய்யாமல் விட்டுவிடுகிறார்.

இதை அறிந்த கவுதம், மைக்கேலையும் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார். கடைசியில் இவர்களிடம் இருந்து மைக்கேல் தப்பித்தாரா..?, இருவருக்கும் என்ன ஆனது..?, காதலில் வெற்றி பெற்றாரா..? என்பதே படத்தின் மீதிக் கதை ஆகும். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.