பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்தான் நவாசுதீன் சித்திக். கடந்த 1999ல் துவங்கிய இவரது திரைப்பயணம் இப்போது வரை தொடர்ச்சியாக இருந்து வருகிறது. தமிழில் கடந்த 2019 ஆம் வருடம் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் 2009 ஆம் ஆண்டு அஞ்சனா பாண்டே என்பவரை திருமணம் செய்த நிலையில், இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது. இதனிடையே அஞ்சனா – ஆலியா சித்திக் ஆனார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2020ல் விவகரத்து பெற்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக ஆலியா சித்திக் புகாரளித்திருந்தார். இப்பிரச்னை இன்னும் முடியாத நிலையில், நவாசுதீன் தன் குழந்தைகளை கவனித்துக்கொள்ள அமிர்தசரஸை சேர்ந்த சப்னா என்ற இளம்பெண்ணைக் கடந்த வருடம் நவம்பர் மாதம் துபாய் அழைத்து சென்றிருந்தார். அதன்பின் நவாசுதீன் கொஞ்சம் வேலையிருப்பதாக சொல்லி மீண்டும் இந்தியா வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து 2 மாதங்களுக்கு பின் குழந்தைகளும் இந்தியா வந்து உள்ளனர். இதனிடையே சப்னாவை தொடர்புக்கொள்ளாத நவாசுதீன், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதை நிறுத்தி உள்ளார். மேலும் அவருக்கு பணமும் கொடுக்கவில்லை. இதன் காரணமாக செய்வதறியாது திகைத்த சப்னா, ஆலியாவிடம் வீடியோ கால் வாயிலாக கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டுவிட்டரில் தகவல் கொடுக்கப்பட்டது.

பின் உள்ளூர் நிர்வாகம் சப்னாவுக்கு உதவி செய்துள்ளது. மேலும் சப்னாவை இந்தியாவுக்கு அழைத்து வர நவாசுதீன் சித்திக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆலியாவின் வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் தன் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதன் வாயிலாகவே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.