2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சுமி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அவரை விடுதலை செய்து 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தது. அப்போது 39 சாட்சியங்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. பொன்முடி தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை சாட்சியங்களிடம் உண்மை தன்மை இல்லை. மனைவியின் வருமானத்தை என்னுடைய வருமானமாக லஞ்ச ஒழிப்பு துறை கணக்கெட்டுள்ளனர் என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன்,

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்தது செல்லாது. டிசம்பர் 21ஆம் தேதி அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என  தீர்ப்பளித்தார்.  இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறை  தண்டனை மற்றம் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்களுக்கு பொன்முடி தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவருக்கு, அவரது மனைவிக்கும்  மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.  மேலும் 30 நாட்களுக்கு அவர்களின் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தனர்.  இந்நிலையில் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்திருப்பதாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இதனால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.