2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது..

2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் மாலை 3 மணி முதல் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். டீம் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. பின் இந்திய அணியின் துவக்க வீரர் ஷுப்மான் கில் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த நிலையில் துனித் வெல்லலகே சுழலில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின் எதிர்பார்க்கப்பட்ட  விராட் கோலியும் 3 ரன்களில் வெல்லலகே பந்தில் ஷானகாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா (48 பந்துகளில் 53 ரன்கள்) அரைசதமடித்த நிலையில் அதே இளம் வீரர் வெல்லலகேவிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேஎல் ராகுல்-இஷான் கிஷன் ஜோடி பொறுப்போடு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பின் ராகுல் 39 ரன்களிலும், இஷான் கிஷன் 33 ரன்களிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து சீரான இடைவெளியில் ஹர்திக் பாண்டியா 5, ஜடேஜா 4, பும்ரா 5 ரன்கள் என அடுத்தடுத்து இலங்கை சுழலில் ஆட்டமிழந்தனர். பின் குல்தீப் யாதவ் டக் அவுட் ஆக, கடைசியில் அக்சர் படேல் 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியில் இந்திய அணி 49.1 ஓவரில்  213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிராஜ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும் அசலங்கா 4 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சுழற்பந்து வீச்சாளர்களிடம் 10 விக்கெட்டுகளையும் இழந்தது இந்தியா.

இந்திய அணி நன்றாக தொடங்கிய நிலையில், 80 ரன்னுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. இலங்கை இளம் வீரரான துனித் வெல்லலகே சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய டாப்  பேட்டர்களை தனது சுழலில் சிக்க வைத்ததால் இந்திய அணி திணறியது.

இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணியின் துவக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் கருணரத்னே இருவரும் களமிறங்கினர். இதில் பும்ராவின் 3வது ஓவரில் நிஷாங்கா (6 ரன்கள்) கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து வந்த குசால் மெண்டிஸ் (15) பும்ராவின் 7வது ஓவரில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷமியிடம் கருணரத்னே (2) ஆட்டமிழந்தார்.

இதையடுத்து சமரவிக்ரம (17) மற்றும் அசலங்கா (22) இருவரும் சேர்ந்து சிறிய கேமியோ ஆடிய நிலையில், இருவரும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஷானகா 9 ரன்களில் நடையை கட்டினார். இலங்கை அணி 25.1 ஓவரில் 99 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. அப்போது தனஞ்செய டி சில்வா மற்றும் வெல்லாலகே இருவரும் ஜோடி சேர்ந்து இந்திய சுழல்பந்துவீச்சாளர்களை பொறுமையாக எதிர்கொண்டு தட்டி தட்டி ரன்கள் சேர்த்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் போட்டியில் இலங்கை ஆதிக்கம் செலுத்தியது. பின் ஜடேஜாவின் 38வது ஓவரில் இந்த ஜோடியை பிரித்தார் ஜடேஜா. தனஞ்செய டி சில்வா (41 ரன்கள்) கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்ஆக மீண்டும் ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது.

இலங்கை 162/7 என இருந்தது. தொடர்ந்து வந்த தீக்ஷனா (2) ஹர்திக் பாண்டியாவின் 41வது ஓவரில் ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்கு 54 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட, உள்ளே வந்த ரஜிதா 42 வது ஓவரின் முதல் பந்தில் குல்தீப் யாதவின் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்.பின் அதே ஓவரில் 3வது பந்தில் பத்திரனா (0) ஆட்டமிழக்க இலங்கை அணி 41.3 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 4விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.