ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதேசமயம் இந்திய அணியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இந்த போட்டியில் இடம் பெறவில்லை. எனவே அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக களம் இறங்குவார் என ரோகித் சர்மா தெரிவித்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரராக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர். இதில் முதல் 2 ஓவர்களில் எச்சரிக்கையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு, 3வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா அதிர்ச்சி அளித்தார். பும்ராவின் 2வது பந்து மார்ஷின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பின்னால் செல்ல, விராட் கோலி பாய்ந்து கேட்ச் பிடித்தார். மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக இன்னிங்சை தொடங்கினர். ஸ்பின்னர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இந்த ஜோடி பொறுப்பாக ஆடிவந்த நிலையில் டேவிட் வார்னர் (41 ரன்கள்) குல்தீப் யாதவின் 17வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ஸ்மித் மற்றும் லாபுஷாக்னே இருவரும் சேர்ந்து சிறிதுநேரம் ஆடி ரன்களை சேர்த்து வந்து நிலையில், ஸ்மித் (46 ரன்கள்) ஜடேஜாவின் ஓவரில் க்ளீன் போல்ட் ஆனார்.. தொடர்ந்து லாபுஷாக்னேவும் (27 ரன்கள்) ஜடேஜாவின் சுழலில் சிக்கினார்.

இதையடுத்து வந்த வீரர்களும் நிலைக்கவில்லை.. அலெக்ஸ் கேரி 0, மேக்ஸ்வெல் 15, கேமரூன் கிரீன் 8, பாட் கம்மின்ஸ் 15, ஜம்பா 6 ரன்கள் என அடுத்தடுத்து அவுட்டாகினர். கடைசியில் மிட்செல் ஸ்டார்க் அவரால் முடிந்தளவு 28 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவரின் 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

தற்போது இந்திய அணி களமிறங்கி 2 ஓவரில் 3 விக்கெட் இழந்தது. இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர் 3 பேர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது கோலியும், ராகுலும் ஆடி வருகின்றனர். கோலியும் ராகுலும் அணியை மீட்டெடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும்..

இந்தியாவின் விளையாடும் XI :

ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல்  (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியாவின் விளையாடும் XI:

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட்.