இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகினார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்..

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே  நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்  இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இன்னும் 2 டெஸ்ட் போட்டி  மீதம் உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளார். வார்னர் எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் இருந்து விலகி இருந்தார் டேவிட் வார்னர்..

முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பி உள்ளார். அவர் 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் வராத பட்சத்தில் ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி : பாட் கம்மின்ஸ் (கே), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (து.கே ), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்.

இந்திய அணி : ரோஹித் ஷர்மா (கே), கேஎல் ராகுல், ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ் , உமேஷ் யாதவ், சூர்யகுமார் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.