இந்தியா – அயர்லாந்து இடையேயான தொடரின் 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது..

இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான தொடரின் இரண்டாவது டி20 போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை டப்ளினில்  இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்ற விரும்புகிறது, அதே நேரத்தில் நடத்தும் அணியான அயர்லாந்து எதிர் தாக்குதல் மனநிலையில் இருக்கும். முதல் டி20 மழையால் பாதிக்கப்பட்டது, இதில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. அறிமுக வீரர் ரிங்கு சிங், துணை கேப்டன் ரிதுராஜ் கெய்க்வாட் போன்ற பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. 2வது டி20யில் இந்திய அணி சிறப்பான வானிலையை எதிர்பார்க்கிறது.

முதல் டி20 போட்டியில், 11 மாதங்களுக்கு பின் அணிக்கு திரும்பிய பும்ரா மற்றும் அறிமுகமான முதல் டி20 போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், அதே நேரத்தில் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயும் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்தி ஈர்த்தார். கடந்த போட்டியில் இந்திய அணியில் பேட்டர்கள் சிலருக்கு ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், அணியில் மாற்றம் இருக்காது என்றுதான் தெரிகிறது. அதே இந்திய அணி களமிறங்கலாம். அதேபோல அயர்லாந்து அணியிலும் மாற்றம் இருக்காது என்று தான் தோன்றுகிறது.

இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு) :

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஜஷ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசீத் கிருஷ்ணா.

அயர்லாந்து டி20 அணியின் பிளேயிங் லெவன் (கணிப்பு) :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆண்ட்ரூ பால்பிர்னி,  ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர் (WK), மார்க் அடேர், ஜோசுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, பெஞ்சமின் ஒயிட், கிரேக் யங்.