இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது வரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் 12-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையாக செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையே கடந்த ஏப்ரல் 28-ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் மற்ற 6 நாட்களும் இயங்குகிறது. இந்த ரயில் மொத்தமுள்ள 661 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது.

இந்த ரயில் நல்கொண்டா, குண்டூர், ஒங்கோலே, நெல்லூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் குறைந்தபட்சம் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்திலும் செல்கிறது. இந்நிலையில் தற்போது செகந்திராபாத் மற்றும் திருப்பதி இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையின் நேரத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி பயண தூரத்தை 15 நிமிடங்களுக்கு முன்பாகவே இந்த ரயில் கடந்து விடும். மேலும் இந்த அறிவிப்பு இன்று (மே 17) முதல் அமலுக்கு வருகிறது.