நாடு முழுவதும் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்திற்கு 2 ரயில்கள் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை- மைசூர் மற்றும் சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி சென்னை மற்றும் மைசூர் இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடங்கள் முன்னதாக இலக்கை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நேரம் மாற்றத்தின் படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தை 7.13 மணிக்கு சென்றடையும். பின்னர் 7.15 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 12.20 மணிக்கு மைசூரை சென்றடையும். இதேபோன்று மறு மார்க்கத்தில் மைசூரில் இருந்து பிற்பகல் 1.5 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடி ரயில் நிலையத்தை 5.33 மணியளவில் வந்தடைந்து பின் அங்கிருந்து 5.35 மணியளவில் கிளம்பி 10 நிமிடங்கள் முன்பாக 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேலும் இந்த புதிய நேரம் மாற்றம் வருகின்ற 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.