கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதிக்குள் காட்டு பன்றிகள் நடமாட்டம் இருப்பதால் வேலைக்கு சென்று வரும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் சிரமப்படுகின்றனர். கடந்த 2 நாட்களாக கக்கன் காலனி, எம்.ஜி.ஆர் நகர், வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் இறந்து கிடக்கிறது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் இறந்து கிடந்த காட்டு பன்றிகளின் உடலை மீட்டு புதைக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வால்பாறை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கோடைகாலத்தில் கனமழை பெய்வதால் கால சூழ்நிலை மாற்றம் காரணமாக காட்டு பன்றிகள் இறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, காட்டு பன்றிகள் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்து கிடக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வனத்துறையினர் காட்டு பன்றிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்து உடல் பாகங்களை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.