சென்னை விமான நிலையம் மேம்பாடு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் விமானத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது விமான நிலையம் மேம்பாடு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருக்கும் அடிப்படை வசதிகளுக்கு தகுந்தார் போன்று பயணிகளிடம் விமான நிலைய மேம்பாடு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் மாறுபடும் நிலையில், தற்போது மத்திய விமான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் விமான நிலைய மேம்பாடு கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது.

இதனால் சென்னையில் விமான நிலைய மேம்பாடு கட்டணம் அதிகரித்துள்ளது. இந்த கட்டணம் பயணிகளிடம் தனியாக வசூலிக்கப்படாமல் விமான டிக்கெட் கட்டணத்துடன் வசூலிக்கப்படும். அதன்படி உள்நாட்டு விமான பயணிகளிடம் இதற்கு முன்பு 205 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது 295 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோன்று சர்வதேச விமான பயணிகளிடம்  இதற்கு முன்பு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த கட்டண உயர்வு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.