திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வேனில் ஷாம்பு, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். நேற்று காலை வெங்கடேஷ் மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு வெளியூர் நோக்கி சென்றார். முன்னதாக கடை முன்பு வேனை நிறுத்தி வீட்டில் இருந்த சிலிண்டர் மூலம் கியாஸ் நிரப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வேன் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்ததால் வெங்கடேஷ் சற்று தூரம் சென்று விட்டார். சிறிது நேரத்தில் வேன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பக்கத்து கடைக்காரர்கள், பொதுமக்கள் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் வேனில் இருந்து மளிகை பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.