திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில் நத்தம் உலுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ஷேக்அப்துல்லா மற்றும் போலீசார் நத்தம் பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது செட்டியார்குள தெரு பகுதியில் இருக்கும் முத்தையா என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை கேட்டபோது முத்தையா எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துவிட்டு டாக்டர் என கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஊசி மருந்துகள், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.