
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா தேனியில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நிருபர் ஒருவர் மலையாள சினிமாவை போன்ற தமிழ் திரையுலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக நடிகை ராதிகா கூறினாரே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் ஜீவா மிகவும் கோபப்பட்டு ஏய் உனக்கு அறிவு இருக்கா…? எந்த இடத்தில் வந்து என்ன கேள்வி கேட்கிற? என்று ஆவேசமாக பேசினார்.
இதனால் ஜீவாவுக்கும் அந்த பத்திரிக்கையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் ஜீவாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பாலியல் தொல்லைகள் குறித்த சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில் அது தொடர்பான கேள்விக்கு நடிகர் ஜீவா மிகவும் டென்ஷன் ஆகி பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.