கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற வாலிபர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் உதவிதொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1.7. 2023 அன்றைய தினத்தில், 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது.

இதனையடுத்து மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதும். பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பிஎஸ்சி நர்சிங் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் இந்த உதவி தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.

மேலும் உதவித்தொகை பெற விரும்புபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருப்பது அவசியம். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 1.7.2023 அன்றைய நிலவரப்படி 45 வயதிற்கு உள்ளேயும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்கு உள்ளேயும் இருப்பது அவசியம்.

வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மனுதாரர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டையுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரில் ஆஜராகி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது