தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணி. இவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பாக பிழைப்பு தேடி இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டன் மேடு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கமலக்கண்ணி வேலைக்கு சென்று விட்டார். இரண்டாம் வகுப்பு வரை படித்துள்ள கமலக்கண்ணி தான் நன்றாக படித்து இருந்தால் குடும்பத்தை காப்பாற்றி இருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார். குடும்ப வறுமையின் காரணமாக இரண்டாம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் கமலக்கண்ணி வேலைக்கு சென்ற நிலையில் மீண்டும் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக அவர் கேரள அரசு சம்பூர்ணாசாக்சாத் எனும் முழு எழுத்தறிவு வகுப்பில் சேர்ந்துள்ளார். அங்கு தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் எழுதப் படிக்க கற்றுக் கொண்ட கமலக்கண்ணி எழுத்து தேர்வு முடிவில் 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் தள்ளாத வயதிலும் படிப்பின் மீது உள்ள ஆசையால் நன்றாக படித்த கமலக்கண்ணிக்கு கிராம பஞ்சாயத்து சார்பில் கேடயம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.