சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். தற்போது மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் மொத்தம் 625 வழித்தடங்களில் இயக்கப்படும் நிலையில் தினசரி 69.5 லட்சம் பயணிகள் பேருந்து சேவையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாததோடு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்ட நெரிசலும் இருக்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு புறநகர் ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவை போன்றவைகள் இருந்தாலும் அதிக அளவிலான பயணிகள் பேருந்து சேவைகளை பயன்படுத்துகிறார்கள்.

இதன் காரணமாக உலக வங்கி அளித்துள்ள பரிந்துரையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதன் முதற்கட்ட துவக்கமாக இந்த வருடத்திற்குள் 500 தனியார் பேருந்துகளை  இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடங்களில் இயக்கப்படும் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை மாநகர போக்குவரத்து கககம் சார்பில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு பேருந்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.