மன்னார்குடியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தி.மு.க மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் ஜி. பாலு இல்ல திருமண விழாவில் முதலில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், நாகை எம்பி எம்.செல்வராஜ், எம்.எல்.ஏ-க்கள் பூண்டி கலைவாணன், தி.மு.க பொருளாளரும் எம்பியுமான  டி.ஆர்.பாலு, டி.ஆர்.பி ராஜா, கே.மாரிமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விழாவினை தலைமை ஏற்று நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, நான் முதல்வராக பதவியேற்ற பின் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், சில மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி, பூரிப்பை விட தற்போது எனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு வந்திருக்கும்போது கம்பீரம் ஏற்படுகிறது.

தி.மு.க ஆட்சி காலங்களில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பாக விவசாயிகள் விவசாய சங்கத்தினர், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், சிறு குறு தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துக்களை அறிந்து ஆய்வு செய்த பின் தான் வரிவிதிப்பு சலுகைகள் அடங்கிய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தான் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து மாநில உணவுத்துறை, வேளாண் துறை அமைச்சர்கள் அரசு துறை அதிகாரிகளை உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்து சேதங்களை பார்வையிட்டு  என்னிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்படி மழையினால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ரூ.20,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அதற்கான கணக்கெடுப்பு கணினியில் பதிவேற்றப்பட்டு வருகிறது. அதனால் இன்னும் ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்படும் என கூறியுள்ளார்.