பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி  உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். பிரபல நடிகரான விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு ஷிஹான் ஹுசைன் பயிற்சி அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஷிஹான் ஹுசைன் தனது உடல்நலம் மோசம் அடைந்து வருவதாக தெரிவித்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் உதவி தொகை அளித்தது. சிகிச்சையில் இருந்த போது ஷிஹான் ஹுசைன் மருத்துவமனை உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் தருவதாக அறிவித்தார். இதயத்தை மட்டும் வில்வத்தை-கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் ஷிஹான் ஹுசைனி(60) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். ரத்த புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை பெஸண்ட் நகரில் உள்ள இல்லத்தில் இன்று மாலை வரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அவரது மறைவிற்கு ரசிகர்களும் திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.