அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது..

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் போது வெடி விபத்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ஓசூரில் ஏற்பட்ட பயங்கர பட்டாசு வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. இந்த நிலையில் தற்போது அரியலூரில் மற்றொரு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் நாட்டு பட்டாசுகளை தயாரித்த போது, இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் என்பவரின் பட்டாசு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பைக்குகள், ஒரு டெம்போ ட்ராவலர் வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது. மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகனை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் திருச்சி சரக டிஐஜி பகலவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.