மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கி பேசினார், அவர் பேசியதாவது, பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டுள்ளன. நீதி என்பதை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை, மக்கள் நலன் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் அளித்துள்ளது காங்கிரஸ் கட்சி. அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியினருக்கும் 10% இட ஒதுக்கீடு. நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும். 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற வரம்பை உயர்த்த அரசியல் சாசனம் திருத்தப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி.பாஜக ஆட்சியில் நீதி மறுக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை வொர்க் வெல்த் வெல்ஃபேர் என்ற அடிப்படையில் திட்டங்கள் உருவாக்கப்படும்.

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க புதிதாக சட்டம் இயற்றப்படும். அரசு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் நடைமுறை ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் பட்டியல் இன மாணவர்களுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் உச்சவரம்பு ரூபாய் 7.5 லட்சம் ஆக உயர்த்தப்படும். நாடு முழுவதும் மாணவர்கள் வாங்கியுள்ள கல்வி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். ஒன்றிய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.