தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் அவர் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இவ்வாறு அடுத்தடுத்து முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்கள் விலகிய நிலையில், இன்று காலை முதல் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பெயரில் ஒரு போலி அறிக்கை உலா வர துவங்கியது.

அதில், சவுக்கு சங்கர் தமிழக பாஜகவின் IT-Wing தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. அண்மையில் சிறைக்கு சென்று வந்த சவுக்கு சங்கருக்கு பா.ஜ.க தான் ஆதரவு அளித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாக இந்த செய்தியினை பலரும் நம்பினர். அதனை தொடர்ந்து இது போலியானது எனவும்  சவுக்கு சங்கருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இதற்கிடையில் யார் இந்த வதந்தியை பரப்பினார்கள் என பாஜக கட்சி பொறுப்பாளர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.