உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலானது பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் கருவறையில் அடுத்த வருடம் மகர சங்கராந்தியின் போது புதிய ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. அச்சிலை வில் ஏந்திய தோற்றத்தில் இருக்குமென ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை உறுப்பினர் சுவாமி தீர்த்த பிரசன்யாச்சாரியா தெரிவித்தார்.

நேற்று முன்தினம் முடிந்த அறக்கட்டளையின் 2 நாள் கூட்டத்தில், கோயில் கருவறையில் நிறுவப்படும் ராமர் சிலை தொடர்பான விவரங்கள் முடிவுசெய்யப்பட்டது. அதன்பின் அறக்கட்டளை உறுப்பினர், ராமர்சிலை குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டார். புது ராமர் சிலை 5 அடி உயரத்தில் நிற்கும் நிலையில், வில்-அம்பு தாங்கிய தோற்றத்தில் இருக்கும். கர்நாடகத்திலிருந்து தருவிக்கப்படும் “கிருஷ்ண சிலா” எனப்படும் அபூர்வ வகை கருங்கல்லில் மைசூருவை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் ராமர் சிலையை வடிப்பார் என அவர் கூறினார்.