ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரான தென்னரசுவிற்கு 90 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பதாகவும் அது குறித்த தகவல்களை அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அ.தி.மு.க அவை தலைவர் தமிழ் மகன் உசேன் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உடன் சென்றுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம் கூறியதாவது, மொத்தம் 2,646 பொதுக்குழு உறுப்பினர்கள் ஓட்டளிக்க தகுதியை பெற்றுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வேட்பாளர் பற்றி சுற்றறிக்கை மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தென்னரசு என்பவரை வேட்பாளராக ஏற்றுக் கொள்வது அல்லது வேறு ஒருவரை பரிந்துரைக்கலாம் என கேட்கப்பட்டது. அதற்கு 90 சதவீத பேர் தென்னரசுவை அ.தி.மு.க வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளனர். அதனால் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக தென்னரசு தான் என்பதை அவை தலைவர் இன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு  மனு நாளையுடன் நிறைவடைவதால் அதற்குள்ளாகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.