உலகம் முடக்குவாத தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி அனுசருக்குப்படுகிறது. பொதுவாக வயது மூப்பு காரணமாக மூட்டு வலி ஏற்படுகிறது ஆனால் இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இளம் வயதில் இருப்பவர்களுக்கும் மூட்டு வலி வருகிறது. ஆர்த்ரைடிசின் பொதுவான அறிகுறிகள் என்னவென்றால் மூட்டு வலி, மூட்டுகளில் வீக்கம், மூட்டு விரைப்பு, நீட்டவும் மடக்கவும் முடியாமல் இருப்பது ஆகியவை ஆகும்.

இந்த அறிகுறிகள் பல ஆண்டுகளாக இருந்தால் அது நாள்பட்ட ஆர்த்ரைடிஸ் என அழைக்கப்படுகிறது. இதில் சில வகையான மூட்டு வலி இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், தோல் ஆகியவற்றை பாதிக்கிறது. ஆர்த்ரைடிஸ் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், ஆட்டோ இம்யூன் இன்பிளமேடரி ஆர்த்ரைடிஸ், தொற்றுகளால் ஏற்படும் மூட்டு வலி, கௌட் ஆகியவை ஆகும்.

இதில் அதிகமான நபர்களை பாதிக்கும் ஒன்று ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினை. கால் மூட்டுகள் மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் பிற மூட்டுகளிலும் வாத பிரச்சனை ஏற்படும். இதனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுகளை இணைக்கும் இணைப்புச் செல்களும் பலவீனமடைந்து வலி உண்டாகும். ஆட்டோ இம்யூன் இன்பிளமேட்டரி ஆர்த்ரைடிஸ் என்றால் நோய் எதிர்ப்பு மண்டலம் அதன் இயல்பிலிருந்து வேகமாக இயங்கும்.

இதனால் மூட்டுகள் முதுகெலும்பு கை கால்களில் வலி ஏற்படும். அது மட்டும் இல்லாமல் கண்கள், சருமம், இதயம் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்படும். ஆர்த்ரைடிஸ் பாதிப்பு இருந்தால் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும். உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுதல் ஆகியவற்றின் மூலமாக ஆர்த்ரைடிஸிலிருந்து விடுபட வழியை காணலாம்.