தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 6 பேர், புதுக்கோட்டையில் 5 பேருக்கும் டெங்கு பரவியுள்ளது.

அதே போல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 3 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காய்ச்சல் அறிகுறிகளுடன் 26 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்று பரவலை தடுக்க மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது பாதுகாப்பு அளிக்கும். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் இருப்போருக்கு எலிசா பரிசோதனை கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ மனைகளிலும் காய்ச்சல் வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொசு உற்பத்தியை தடுக்க வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது.