தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வருகின்ற 24-ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாட்டை நடத்த இருக்கிறார். இதற்கான கால்கோள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து அவருக்கு இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக அமைந்தாலும் திருச்சி மாநாட்டுக்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் சிதறுண்டு போவார்கள் என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகிறார்கள். தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டதால் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாட்டில் கண்டிப்பாக அதிமுக கட்சியின் கொடியை நாங்கள் பயன்படுத்துவோம். இதனால் எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை. அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு தனி கட்சி தொடங்க வேண்டிய அவசியம் கிடையாது. இது எங்களுக்காக எம்ஜிஆர் விட்டு சென்ற கட்சி. அதிமுகவை காப்பாற்றும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது என ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் திருச்சியில் நடைபெறும் மாநாடு ஓபிஎஸ் தரப்புக்கு திருப்புமுனையாக அமையலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.