சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச் சேர்ந்த போதைப்பொருள் சப்ளையர் கெவின் என்பவரிடம் கிருஷ்ணா கொகைன் வாங்கியதைக் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பிரதீப்பின் நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்படும் கெவின், பெருந்தொகை போதைப்பொருட்களை பெங்களூரிலிருந்து சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளார். இவருடன் கிருஷ்ணா வங்கி பரிவர்த்தனை மூலமாக தொடர்பில் இருந்ததும், ஜி-பே போன்ற டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது. இதன் அடிப்படையில், கெவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கொக்கைன், எம்டிஎம்ஏ, மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு விதமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துக்கு அடுத்தபடியாக கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டிருப்பது, திரையுலகத்தில் அடுத்ததாக யார் சிக்கப்போகிறார்கள் என்ற பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட கெவின் கூட்டாளிகள் இரண்டு பேர் அதாவது அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.