உத்திரபிரதேச மாநிலம் மொரகாபாத் பகுதியை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று தனியாக வசித்துள்ளார். இதனிடையே அவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே முதல் திருமணத்தை மறைத்து கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் அந்த பெண்ணுக்கும் மற்றொரு பெண் குழந்தை இருப்பதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் முதல் மனைவியின் வீட்டிற்கும் அவ்வபோது வந்து சென்றுள்ளார். முதல் மனைவிக்கும் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்தது தெரியவில்லை. இந்நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்த பின் தனது கணவரிடம் உங்கள் வீட்டிற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் உங்களின் பெற்றோரை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் இரண்டாவது மனைவியை அந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்தில் குடி அமர்த்தியதாக கூறப்படுகின்றது. இதனால் கணவர் மீது சந்தேகம் அடைந்த இரண்டாம் மனைவி அவர் குறித்த விஷயங்களை திரட்டி அவரது சொந்த ஊருக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்றபோதுதான் அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருமணமானது தொடர்பாக அங்கு மூவருக்குள்ளும் பிரச்சனை எழுந்து இறுதியில் இரண்டாவது மனைவி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு கவுன்சிலிங்ற்காக மாற்றப்பட்டது. அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தான் வினோதமாக மாறி இருக்கிறது. அங்கு மூவரையும் கவுன்சிலிங்கிற்கு அனுப்பிய காவல்துறையினர் பேசி முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி திங்கள் முதல் புதன்கிழமை வரை கணவர் முதல் மனைவி வீட்டிலேயும் வியாழன் முதல் சனிக்கிழமை வரை இரண்டாவது மனைவி வீட்டிலேயும் இருந்து குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேபோல வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கணவர் எந்த மனைவியோடு இருக்க ஆசைப்படுகிறாரோ அந்த மனைவியுடன் இருந்து கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு மூவரும் சம்மதித்து ஒப்பந்தமும் போடப்பட்டு கையெழுத்தும் வாங்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த வினோதமான தீர்ப்பை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.