கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் பணத்தின் விவரத்தை “Personal Cash Register” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து வைக்கப்பட்டு, அலுவலகத் தலைவரின் முறையான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பதிவேட்டை சம்பந்தப்பட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றுப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும் என்றும், அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதை நேரடியாகக் கள ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரத்யேகப் பதிவேட்டை சரியாகப் பராமரிக்கத் தவறினாலோ அல்லது அலட்சியம் காட்டினாலோ, சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவர், கண்காணிப்பாளர் மற்றும் வருகைப் பதிவேட்டைப் பராமரிக்கும் பணியாளர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி உத்தரவு கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
