தென்னிந்தியத் திரையுலகின் பொற்காலத்தைத் தன் வசீகரக் குரலால் ஆண்ட மூத்த பின்னணிப் பாடகி கே.ஜமுனா ராணி தனது 88-வது வயதில் காலமானார். ஆந்திரப் பிரதேசத்தில் 1938-ல் பிறந்த அவர், தனது ஏழாவது வயதிலேயே திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து சாதனை படைத்தார். கடந்த 1946-ல் வெளியான புகழ்பெற்ற ‘தியாகய்யா’ தெலுங்குத் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாகவும் பாடகியாகவும் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய அவர், 1940-கள் முதல் 1960-கள் வரை தென்னிந்திய இசை உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தார்.

தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் என பல மொழிகளில் மொத்தமாக ஆறு ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளார். பல தசாப்தங்களாகத் திரையுலகில் தீவிரமாக இயங்கி வந்த அவர், 1980-களிலும் கூட தனது பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கினார். குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான புகழ்பெற்ற ‘நாயகன்’  திரைப்படத்தில் இடம்பெற்ற “நா நவ்வே தீபாவளி” பாடல் அவரது பிற்காலத்து மறக்க முடியாத மாஸ்டர் பீஸ் பாடல்களில் ஒன்றாக ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

துரோஹி, ரத்னமாலா, லைலா மஜனு, சந்திரிகா, தேவதாசு, சந்தானம், அலிபாபா 40 திருடர்கள், பாடி பந்துலு, மற்றும் இராமனும் பீமனும் உள்ளிட்ட எண்ணற்ற வெற்றிப் படங்களில் இவர் தனது குரலைப் பதிப்பித்துள்ளார்.

வெறும் தெலுங்குடன் நின்றுவிடாமல், தமிழ் திரையுலகிலும் தனது பன்முகத் திறமையாலும் தனித்துவமான குரல் வளத்தாலும் கோடிக்கணமான ரசிகர்களை அவர் ஈர்த்தார். அவரது பாடும் திறனும் உணர்ச்சிகரமான வெளிப்பாடும் தமிழ் சினிமா வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளன.

பாசமலர், மன்னாதி மன்னன், குமுதம் படத்தில் இடம்பெற்ற மாமா பாடல் உள்ளிட்ட பல புகழ் பெற்ற பாடல்களை பாடிய நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டிற்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கும், குறிப்பாக தென்னிந்திய இசை உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு மாபெரும் இழப்பாகும்.