உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், மீரட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஜூன் 25, 2026 அன்று அனைத்து சடங்குகளுடனும் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் மணமகன் நுழைந்தபோது, மணமகள் அவரிடம் தனக்கு வேறொருவருடன் காதல் இருப்பதாகவும், அவரோடுதான் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன்னைத் தன் காதலனுடன் சேர்த்து வைக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொண்டு அந்தப் பழியை மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போட்டுவிடுவதாக மணமகள் மிரட்டல் விடுத்தார். இந்தத் தற்கொலை மிரட்டலால் மணமகன் மிகுந்த அச்சத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளானார்.

இதனால் காதலியின் மிரட்டலால் பயந்துபோன மணமகன், எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக ஒரு பெரிய முடிவை எடுத்தார். அவர் இரவோடு இரவாக மணமகளின் காதலனைத் தொடர்பு கொண்டு வரவழைத்து, தனது மனைவியை அவரிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில் பாலிவுட்டின் புகழ்பெற்ற ‘ஹம் தில் தே சுகே சனம்’ திரைப்பட பாணியில் நடந்த இச்சம்பவம், மணமகனின் இந்த துணிச்சலான மற்றும் சாதுரியமான செயலால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டு, அப்பகுதியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.