பள்ளி குழந்தைகளின் அடையாள அட்டையில் (ID Card) சாதியைக் குறிப்பிடுவது போன்ற விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்குத் தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மிக அழுத்தமான விளக்கத்தை அளித்துள்ளார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் குழந்தைகளின் ஜாதியை அடையாள அட்டையில் குறிப்பிடுவது என்ற ரீதியில் அளித்திருந்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகத் தீவிரமாக, நெகட்டிவாகப் பரவியது.

பிஞ்சு குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், அவர்களின் அடையாள அட்டையிலேயே ஜாதியைக் குறிப்பிட்டுப் பிரிவினையைத் தூண்டலாமா என்று பெற்றோர்களும் நெட்டிசன்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். ​இந்தச் சர்ச்சை பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தற்போதைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “பள்ளிகளில் வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி தேவையில்லை; இந்த அடையாள அட்டை விவகாரம் மக்கள் மத்தியில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிகளில் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டக்கூடிய எத்தகைய செயல்களுக்கும் தற்போதைய அரசு அனுமதிக்காது என்றும், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக தலையிட்டுத் தந்த விளக்கம், தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி மக்கள் மத்தியில் நிலவி வந்த பெரும் குழப்பத்தைத் தீர்த்துள்ளது.