திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் ஸ்தம்பிக்க வைத்துள்ள நிலையில், பிரபல இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தொலைபேசி வாயிலாகப் பேசி தனது ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் பகிர்ந்துள்ளார். பாக்யராஜ் அவர்களின் இறப்பு செய்தி தனக்கு ஒரு மிகப்பெரிய இடியாக இறங்கியுள்ளதாகக் கூறியுள்ள அவர், நேற்றிரவு தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை மிகவும் உருக்கமாக விவரித்துள்ளார். நேற்று இரவு 10:30 மணி அளவில் கே.பாக்யராஜ் அவர்கள் சீனு ராமசாமியைத் தொலைபேசியில் அழைத்துச் பேசியுள்ளார்.

​அப்போது, “ரொம்ப லேட் நைட் கால் செய்து உன்னைத் தொந்தரவு செய்துவிட்டேனோ” என்று கூறி சிரித்தபடி மிகவும் சந்தோஷமாகப் பேசியுள்ளார். மேலும், விரைவில் வரவிருக்கும் “எழுத்தாளர் சங்க தேர்தல் வருகிறது, நமக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது” என்றும் உற்சாகமாகப் பேசியுள்ளார். ஆனால், நேற்றிரவு அவ்வளவு மகிழ்ச்சியாகப் பேசியவர், இன்று காலையில் திடீரென இறந்துவிட்டார் என்ற செய்தியைத் தம்மால் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று சீனு ராமசாமி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.