திருநெல்வேலியில் அமைச்சர் கே.என் நேரு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, நயினார் நாகேந்திரனை தலைவராக போட்டு பாஜகவினர் ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளனர். அந்த கூட்டத்தில் திமுக ஆட்சியை வேரோடு பிடுங்கி எறிவோம் என அவர்கள் பேசியுள்ளனர். அது அவர்களின் ஆசை. அதை அவர்கள் கூறி வருகிறார்கள். விவசாயத்தில் ஒரு பயிரை வேரோடு பிடுங்கி நடவு செய்தால் அந்த பயிர் இன்னும் பெரிதாக செழிப்பாக வளரும்.

அதே போல எங்கள் கட்சி அவர்கள் பிடுங்க நினைத்தாலும் இன்னும் சிறப்பாக தான் இருக்கும். கடந்த 15 ஆண்டுகளாக பாஜக வேரோடு பிடுங்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது. தொடர்ந்து வருங்காலத்திலும் திமுக தான் மாபெரும் அளவில் வெற்றி பெறும். கடந்த காலங்களில் தமிழகத்திற்கு மூன்று முறை வந்த அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார்.

ஆனால் அது குறித்து அவரும் விளக்கம் கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருண்ட அவர்களது கண்ணுக்கு தெரியவில்லை. அமித்ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது. அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் உண்மையிலேயே பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

பாஜகவினரும் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. இந்த சூழலில் அவர்கள் ஜெயித்து விடுவோம் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என கூறுவது வேடிக்கையாக தான் உள்ளது. தோற்றுப் போய் விடுவோம் என்ற அச்சத்தில் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜகவினர் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு போட்டி என்பதை கிடையாது. எதிரணியில் யார் நின்றாலும் நாங்கள் தான் மகத்தான வெற்றி பெறுவோம் என அமைச்சர் கூறியுள்ளார்.