திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்எஸ்ஐ) சண்முகவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர், மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அந்த இடத்தில்தான் மணிகண்டன், போலீசார் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றார் என கூறப்படுகிறது. காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மீது தாக்க முற்பட்டதில், அவருக்கு வலது கையில் கத்திக்காயம் ஏற்பட்டதாகவும், இந்நிலையில் தற்காப்புக்காக போலீசார் மணிகண்டனை சுட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சரவணனும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. , இந்த வழக்கில் கைதான மற்ற குற்றவாளிகள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. தொடர்ந்து, போலீசார் மற்ற தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
