நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்..

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், 74 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து இந்தியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இந்தியர்கள். பல மதங்களும், மொழிகளும் நம்மை பிரிக்கவில்லை, ஒன்றிணைத்துள்ளன. நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இதுதான் இந்தியாவின் சாராம்சம். இந்த நன்னாளில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் நமது சாதனைகளை நாம் ஒன்றாக கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை நமது பயணம் ஆச்சரியமானது. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் குறிக்கோளின் படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். தேசிய கல்விக் கொள்கையில் லட்சிய மாற்றங்கள் பல செய்யப்பட்டுள்ளன. தேசியக் கல்விக் கொள்கையில் கல்வி செயல்முறையை விரிவுபடுத்துவதிலும் ஆழப்படுத்துவதிலும், தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. ககன்யான் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் மூலமாக நமது நாடு மனிதர்களை ஏற்றி செல்லும் விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்று நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.