தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ஆம் தேதி கள்ளச்சாராய சம்பவத்தில் விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த ஜெயசக்தி பிரைவேட் கம்பெனியின் அதிபர் இளையநம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு கள்ளச்சாராயத்தை செங்கல்பட்டில் விற்பனை செய்த அமாவாசை என்பவரும், மரக்காணத்தில் விற்பனை செய்த அமரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஜெயசக்தி நிறுவனத்தில் இருந்து கள்ளச்சாராயத்தை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் எனும் எரிபொருள் கலக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் வழக்கில் தொடர்புள்ள இளையநம்பி, பகதுருல்லா என்று ராஜா, ஏழுமலை விளாம்பூர் விஜி உட்பட 13 பேர் மீது மரக்காணம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகளை கொலை வழக்காக மாற்றி உள்ளதாக தற்போது டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் மெத்தனால் தயாரிக்கும் கம்பெனிகளில் அதிகாரிகள் உதவியோடு ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.