மயோபியா என்பது கிட்ட பார்வை குறைபாடு என்று அறியப்படுகிறது. அருகில் உள்ளவை கண்களில் தெளிவாக தெரியும். தூரத்தில் இருப்பவை மங்கலாக தெரியும். கணினி மற்றும் செல்போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகர்ப்புறத்தில் இருக்கும் ஐந்து முதல் 15 வயதுடைய குழந்தைகள் 3 பேரில் ஒரு வீதம் மயோபியா நோயால் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

2050 ஆம் ஆண்டுக்குள் பாதிப்பு அளவு இரட்டிப்படைந்து இருவரில் ஒருவருக்கு மயோபியா ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தைகள் செல்போன் மற்றும் கணினி பயன்படுத்துவதை விட்டு வெளியில் சென்று விளையாடுவதை பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இயற்கை வெளியில் போதுமான நேரத்தை செலவழிக்காததும் செல்போன்களை நீண்ட நேரம் பார்ப்பதுமே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். கண்களின் சீரான வளர்ச்சிக்கு சூரிய வெளிச்சம் என்பது அவசியம். அதுவும் குழந்தைகளுக்கு நிச்சயம் தேவை என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.