தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நம்மாழ்வார் விருது குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வேளாண் பெருமக்களினுடைய நலனுக்காக கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு உழவர் நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு அங்கக வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களில் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை அறிவித்து வருகிறது. அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய  பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வேளாண்மையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அதை ஊக்குவித்து பிறகு விவசாயிகளுக்கும் கை கொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது 5 லட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டு பத்திரத்தோடு குடியரசு தினத்தன்று வழங்க ப்படுகிறது. அங்கக வேளாண்மையை பின்பற்றி சாகுபடி செய்திருக்க வேண்டும். இதற்கு ஆதார் அட்டை ஜெராக்ஸ், சிட்டா அடங்கல் மற்றும் அங்கக வேளாண்மை சான்றிதழோடு விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மூன்று விவசாயிகளுக்கு குடியரசு தினத்தன்று முதல் பரிசாக 2.50 லட்சம் பணத்தோடு பத்தாயிரம் மதிப்புடைய பதக்கம், இரண்டாம் பரிசாக 1.50 லட்சம் 7 ஆயிரம் மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசாக ஒரு லட்சத்துடன் 5000 மதிப்புடைய பதக்கமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவும் அல்லது www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.