பீகார் மற்றும் ஜார்க்கண்டில் போலி ஆவணங்களை பெற்று கொண்டு சிம் கார்டு வழங்கப்பட்டு இருப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தது. அதன்பின் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலுள்ள 7 கோடி செல்போன் சிம் கார்டு பயனாளர்களின் தரவுகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் சோதனையில் ஈடுபடுத்தியது. இந்நிலையில் லட்சத்துக்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளது தெரியவந்திருக்கிறது.

சிம் கார்டு மோசடிக்கு எதிரான நடவடிக்கையில் ஏப்ரல் மாதத்தில் பீகார் மற்றும் ஜார்க்கண்டில் 2.25 லட்சத்துக்கும் அதிகமான செல்போன் சிம் கார்டு எண்களை தொலைத்தொடர்புத்துறை செயலிழக்க செய்திருக்கிறது. இந்த சிம் கார்டுகளில் ஏராளமானவை போலி ஆவணங்கள் வாயிலாக வாங்கப்பட்டதன் விளைவாக செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு 517 இடங்களில் விதிகளுக்கு மாறாக சிம் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டு இருப்பதை கண்டறிந்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அவற்றின் விற்பனையாளர்களுக்கு தடைவிதித்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புது தில்லியை தலைமையிடமாக கொண்ட தொலைத் தொடர்புத்துறை, நாடு முழுவதும் உள்ள 87 கோடிக்கும் மேற்பட்ட சிம்கார்டு சந்தாதாரர்களின் தரவுகளை சோதனை மேற்கொண்டு வருவதன் வாயிலாக சிம் கார்டு மோசடியில் ஈடுபடுவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க உதவுகிறது. செல்போன் சிம் கார்டு எண்களை செயலிழக்க செய்வது சட்டவிரோத (அ) போலியான ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட சிம் கார்டுகளின் பரவலான பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்தை கொண்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.