மத்திய அரசின் அம்ருத் திட்டம் தமிழகத்தில் 11 மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சி பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கிறது. இதன்படி நகரங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான நிதியில் பெரும் பகுதியை மத்திய அரசு வழங்கி வருவதனால் இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 20 வருடங்களில் இந்த நகரங்களில் ஏற்படும் வளர்ச்சி பற்றிய மாஸ்டர் பிளான் என்ற முழுமை திட்டம் இருக்க வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் அம்ருத் திட்டத்திற்கு தேர்வானவற்றில் 18 நகரங்களுக்கு முறையான முழுமை திட்டம் இல்லாத காரணத்தினால் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசின் அறிவுரைப்படி தமிழக அரசு 18 நகரங்களுக்கு புதிய முழுமை திட்டங்கள் தயாரித்து வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் கலந்த ஆலோசனை நிறுவனங்கள் மூலமாக இந்த பணிகளை டி.டி.சி.பி மேற்கொண்டு வருகிறது. இது குறித்து டி.டி.சி.பி அதிகாரி ஒருவர் கூறிய போது, தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சிவகங்கை, கும்பகோணம், சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய 18 நகரங்களுக்கு முழுமை திட்டம் தயாரிக்கப்படுகிறது. இதில் நாகப்பட்டினத்திற்கு 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கான முழுமை திட்ட பணிகள் முடிவடைந்து வல்லுனர் கருத்துக்களும் பெறப்பட்டுள்ளது. அதனால் இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. அதேபோல பிற நகரங்களில் முழுமை திட்ட தயாரிப்பு பணிகளும் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. விரைவில் படிப்படியாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.