ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மேட்சில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 482 ரன்கள் குவித்தது. இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்த மேட்சில் கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்கள் எட்டிய போது ஒரு சாதனை படைத்துள்ளார்.

அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளிலும் 17,000 ரன்களைக் கடந்த  6-வது இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்த சாதனையை ரோகித் தன்னுடைய 438-வது சர்வதேச இன்னிங்ஸில் செய்திருக்கிறார். ரோகித் சர்மா இதுவரை 148 டி20 போட்டிகள், 241 ஒரு நாள் போட்டிகள், 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் 9,782 ரன்களையும், டி20 போட்டிகளில் 3,853 ரன்களையும், டெஸ்ட் போட்டிகளில் 3350 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரங் கங்கூலி, எம்.எஸ் தோனி மற்றும் டிராவிட் போன்றோர் 17,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.