திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகம் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெட்டைகிணறு பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பட்டி அமைத்து 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மணிகண்டன் 20 ஆடுகளை மட்டும் பட்டியில் அடைத்துவிட்டு மற்ற ஆடுகளை மேச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் 3 மணிக்கு மேல் தோட்டத்திற்கு உள்ளே புகுந்த 3 நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது.

இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியடித்து மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தோட்டத்திற்கு விரைந்து வந்த மணிகண்டன் நாய்கள் கடித்ததால் 15 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதுபற்றி அறிந்த கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.