தென்மாவட்ட மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பால் விநியோகம் சீராகி உள்ளது. தூத்துக்குடியில் 81% அளவிற்கு பால் வினியோகம் சீராக உள்ளது. இதுவரை 5 லட்சம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்டுருக்கு வழங்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில பேரிடர் குழுக்கள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தென் மாவட்டங்களில் 3,400 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.  சுமார் 15,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 49,707 பேர் மீட்கப்பட்டுள்ளனர். போலீசார் சுமார் 1700 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணியாற்றினர். ராணுவம், கடலோர காவல் படையில் இருந்தும் மீட்பு பணியில் இறங்கினர். சுமார் 15,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் சமுதாயக்கூடம் மூலம் உணவு தயாரித்து கொடுக்கிறோம்.

அரசின் சேவைகள் அனைத்தையும் சரி செய்யும் பணிகள் நடைபெறுகிறது. 1200 மெட்ரிக் டன் லாரிகளிலும் 81 டன் ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொருள் வினியோகிக்கப்பட்டன. 64 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. 45 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மாவட்டங்களில் இருந்து நெல்லை தூத்துக்குடிக்கு பணியாளர்கள் செல்ல உள்ளனர்.

கன்னியாகுமரி, தென்காசியில் அனைத்து நியாய விலை கடைகளும் செயல்பட தொடங்கியுள்ளன. கனமழை வெள்ளத்தால் 3,500 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 68 நியாய விலை கடைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் சுமார் 1.83 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேளாண் துறையை சேர்ந்த அதிகாரிகள் மிக தீவிரமாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் சேதமடைந்த சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.