திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புரசம்பட்டு கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரவீன் குமார் தனக்கு சொந்தமான வாகனத்தை திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் வாடகை ஒப்பந்தத்தின் பேரில் கொடுத்துள்ளார். மாதம் தோறும் மோகன்ராஜ் 18 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தின்படி மோகன்ராஜ் வாடகை பணத்தை கொடுக்காததால் பிரவீன் குமார் தனது வாகனத்தை தருமாறு கேட்டார். ஆனால் வாகனத்தை காட்டாமல் மோகன்ராஜ் தாமதம் செய்ததால் பிரவீன் குமார் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், மோகன்ராஜ் ராஜேந்திரன் என்பவர் மூலமாக பிரவீன் குமாரின் வாகனத்தை கோவையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதே போல வாடகை ஒப்பந்தத்தின் பேரில் திருவண்ணாமலை சேர்ந்த ஐந்து பேரிடமிருந்து உரிய அனுமதி இல்லாமல் வாகனங்களை விற்று மோகன் ராஜ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரனை தேடி வருகின்றனர். இதில் கைதான மோகன்ராஜ் போயம் பாளையம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.