நாடு முழுவதும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் போரில் வெற்றி பெற்ற ராணுவ வீரர்களை சிறப்பிக்கும் வகையில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. நம் தாய் நாட்டிற்காக அளவில்லா தியாகங்களை செய்த ராணுவ வீரர்களின் தியாகத்தை இந்த தினத்தில் போற்றுவோம். கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கார்கிலை கைப்பற்ற வந்தது.

அதனை எதிர்த்து ஆபரேஷன் விஜய் என்று பேரிடப்பட்ட போரில் இந்திய ராணுவம் வெற்றி கண்டது. கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் நுழைந்தது. மேலும் முக்கிய பகுதிகளை அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்றனர். இந்நிலையில் மே 8-ஆம் தேதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சியாச்சின் பகுதிகளை மீட்பதற்காக ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ராணுவம் களமிறங்கி தொடர்ந்து போராடியது.

இரு ராணுவத்தினருக்கும் கடுமையான போர் நிகழ்ந்தது. அந்த போர் நடைபெற்ற சமயம் கடுமையான பனிப்பொழிவு இருந்தும், அதனை பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக போராடினர். அதன் விளைவாக ஜூலை மாதம் இந்திய விமான படையின் உதவியுடன் இந்திய ராணுவம் டைகர் மலையை மீட்டது.

இதனை தொடர்ந்து ஜூலை 26-ஆம் தேதி டைகர் மலை ரொலோலிங் மலை, பத்திரா டாப், ஸ்ரீ நகரில் லே தேசிய நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளையும் மீட்டு இந்திய ராணுவம் ஜூலை இறுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் சரவணன் உட்பட மொத்தம் 527 ராணுவ வீரர்கள் போரில் தங்களது உயிரை நீத்தனர். மேலும் 1363 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் போரில் வீர மரணமடைந்த அனைத்து இந்திய போர் வீரர்களுக்கும் இந்திய அரசு பல்வேறு விருதுகளை கொடுத்து கௌரவித்தது. நம் நாட்டிற்குள் நுழைந்த பாகிஸ்தான் படை வீரர்களை வீழ்த்தி வெற்றி கண்ட ராணுவ வீரர்களின் பெருமையையும், தியாகத்தையும் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.